தங்களின் தேர்தல் சின்னத்தையே எரித்த பிள்ளையான் குழு! இது பாரிய குற்றம்
வாகரை பிரதேசத்திலுள்ள பணிச்சங்கேணி கடற்கரையில் வாகரை பிரதேச சபை உறுப்பினரின் படகு தீ வைக்கப்பட்டுள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் மட்டக்களப்பு பொறுப்பாளர் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், தமிழர் விடுதலை கூட்டணியின் மட்டக்களப்பு பொறுப்பாளருமான இரா.துரைரெட்ணம் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உப தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் போட்டியிட்டு வாகரை பிரதேச சபைக்கு தெரிவான கதிர்காமத்தம்பி சந்திரமோகன் என்பவரது படகே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், தமிழர் விடுதலை கூட்டணியின் மட்டக்களப்பு பொறுப்பாளருமான இரா.துரைரெட்ணம் தெரிவிக்கையில்-
தமிழர் விடுதலை கூட்டணியின் வாகரை பிரதேச சபை உறுப்பினர் சந்திரமோகன் என்பவரது படகு தீ வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக எனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றேன்.
இச்சம்பவமானது ஜனநாயகத்திற்கும் அரசியலுக்கும் விடப்பட்ட சவாலாக நான் கருதுகின்றேன். எதிர்காலத்தில் அரசியர் ரீதியான சூழ்ச்சி முகமான வேலைகளை இங்குள்ள அரசியல் வாதிகள் சிலர் கைவிட வேண்டும். ஜனநாயக ரீதியாக செயற்படுவதற்கான அங்கீகாரத்தை இவர்களுக்கு வழங்க வேண்டும்.
அதனை விடுத்து தங்களுக்கு எதிராக செயற்படுகின்றார் என்பதற்காக ஒரு வன்முறையில் ஈடுபடுவது நாகரீகமான செயலில்லை. இதனை அவர்கள் நிறுத்த வேண்டும். நாங்கள் சட்டத்தை நம்புகின்றேன். பொலிஸார் நீதியாக விசாரணை செய்து குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்துமாறு வேண்டுகின்றேன் என்றார்.